Friday, 4 May 2012

இப்படிக்கு சுயநலவாதி.......

இப்படிக்கு சுயநலவாதி.......

உறுதியாய் இருக்கின்றாயா? உலகப்பந்தே என அடிக்கடி
உலுக்கிப் பார்க்கும் பூகம்பம்

எப்பொழுது ஏப்பம் விடலாம்  என ஏக்கத்தோடு
எமனாய்க் காத்திருக்கும் சுனாமி
 
அழைக்கப்படாத விருந்தாளியாய்
தவறாமல் தன் வருகையைத் தெரிவிக்கும்
வறட்சியும்  வானிலை மாற்றமும்
 
எப்பொழுது பற்றிக்கொள்ளும் போர்மேகம்
எங்கெங்கு பொழியும் இரத்தமழை என
எதுவும் தெரியாமல் தன் வல்லமையைக்காட்டிட
தயாராய் இருக்கும் அறிவியலின் வாரிசுகள்
 
இப்படி
 உள்ளேயும் வெளியேயும்
நிறைய அபாயங்களைச் சுமந்துகொண்டு
எப்பொழுது வீழ்வோம் எனத்தெரியாமல்
குழந்தையின் கையிலிருக்கும் முட்டைபோல
விண்வெளிகுப்பைகளுக்கு மத்தியிலே
வீராய்ப்பாய்ச் சுற்றிக்கொண்டிருக்கிறது பூமி
 
உயிர்கோளத்திற்கு ஓர் ஆபத்தல்ல!
ஏற்பட்டிருப்பது பேராபத்து
 
மரங்களின் கிளைகளை முறித்து முறித்து
மேகங்களுக்கும் சில்வர் அயோடைடு தேவதைகளுக்கும்
பாகப்பிரிவினை நாமே செய்துவிட்டும்
வளர்ந்திருந்த மரங்களுக்கெல்லாம்
வாய்க்கரிசி போட்டுவிட்டும்
 
மழை இல்லையே! வாழ வழி இல்லையே! என
மனிதகுலம் மரணப்படுக்கையில் மன்றாடுவது ஏன்?
 
மரங்களின் ஒவ்வொரு வேரும் பிடுங்கப்படும்பொழுது
மனித இனத்திற்கு மரணக்குழி பூமியில் அல்ல 
ஓசோனிலிருந்தே ஆரம்பிக்கிறது,,,
 
ஆக்கத்திற்குத்தானே அறிவியல் சக்தி! பிறகு ஏன்
அணுக்கதிர்உலைகளை கொதிக்கவிட்டு அதில்
மனித இனத்தை வேகவைத்து மாபெரும் பேரழிவு என்று
வரலாற்றுச் சுவடுகளில் வரிவடிவம் பதிக்கவேண்டும்,
 
உரியினம் தழைக்க என்ன தேவையோ? அதற்குமட்டும்
அறவியல் உரமிட்டால் போதும் இல்லையேல்
அறிவியல் சேற்றில் தாமரைபோல் இருக்கவேண்டிய உயிரினம்
சாக்கடையில் சிக்கி மனிதன்போல்
மரித்துப் போகவே நேரிடும்,
 
அகிலத்தை ஆக்கிரமித்த பிளாஸ்டிக் குப்பைகள்
வீதிகளை குளிப்பாட்டும் சாக்கடை கழிவுகள்
தொழிற்சாலைகள் துவட்டிவிடும் ரசாயண ஓடைகள்
பூமியைப் புதைத்துப்போட இவைபோதாதென்று
நினைத்தாய் போலும்
 
உன்னை சுமக்கும் பூமித்தாயின் மடியில்
விசத்தை விதைக்க தொடங்கினாய்- கேட்டால்
உரம் என்கிறாய் அறிவியல் வளர்ச்சி என்கிறாய்
 
மண்ணெல்லாம் புண்ணாகி
மண்வளம் கெட்டபிறகு அதில் வாழும்
மனிதவளம் மட்டும் மலர்ச்சியா அடையும்?
நோய்வாய்ப்பட்டிருக்கும் பூமித்தாய்க்கு பிறக்கும்
குழந்தைகளும் நோயாளிகளாகத்தானே பிறக்கும்

சாலையோரச் சாத்தானான புழுதிகள்
வாகனங்கள் துப்பிச்செல்லும்  கரியமில வாயுத்துகள்கள்
தொழிற்சாலைகள் விரட்டிவிடும் வாயு அரக்கன்கள்
இவைதான் பூமித்தாயின் சுவாசப்பையை
ஒட்டைபோடும் நச்சுஊசிகள்
 
இன்று
மனித இனம் மாத்திரைகளுக்குள்ளும் மருந்து பாட்டில்களுக்குள்ளும்
சிக்குண்டு கிடப்பதால் காரணம் தெரியுமா? வேறொன்றுமில்லை
நச்சுக்குவியல்களின் கூடாரத்திற்குள் பூமித்தாய்
மூச்சுத் திணறிக் கொண்டிருப்பதால்தான்
 
உலகமக்களுக்கு தொற்று வியாதியையும்
உலகப்பந்திற்கு தொடரந்து வியாதியையும் தந்துகொண்டிருக்கும்
புகைதரும் வாகனங்களின் வாழ்நாளுக்கு
முற்றுப்புள்ளி வைத்தால்தான் வையகத்தின் வாழ்நாளுக்கு
தொடர்புள்ளி வைக்கமுடியும்
 
மரங்களை நடுவதும்- நட்டிருக்கும்
 மரங்களைக்காப்பதும் நம் கடமையென
ஒவ்வொரு மனிதனின் மனதிலும்
விழிப்புணர்வு விதை விளைய வேண்டும்
 
சுற்றுச்சூழல் மாசுபாட்டுக் குப்பைக்குள்
முடவனாய் முடங்கிக்கிடக்கும்
இந்தப் பூமிப்பந்தைச் சலவை செய்யத் தயாரென
இளைஞர்பட்டாளம் தயாராக வேண்டும்,
 
பூமிக்குப் பாதகம் செய்யும் உரங்களை
துறந்தும் மறந்தும் -இயற்கை நிறைந்த
வேளாண் உற்பத்தியை செய்திடும்
வேளாண் விற்பன்னர்கள் பெருக வேண்டும்

அணுக்களை ஆக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்துவோம்/ஒருபோதும்
அழிவிற்குப் பயன்படுத்த மாட்டோம் என
அறிவியல் விஞ்ஞானிகளின் உடலில் உள்ள
ஒவ்வொரு அணுவும் தீர்மானமிடவேண்டும்
 
ஆபத்துக்களின் கூடாரத்திற்குள்
அகப்பட்டுக்கொண்ட பூமிப்பந்தை / தனி ஒரு மனிதன்
சட்டம் போட்டுக் காப்பாற்ற முடியாது,
 
ஒவ்வொரு மனிதனும் திட்டம் போட்டு /தன்
எதிர்காலத் தலைமுறை நல்வாழ்வு வாழவேண்டும் என
சுயநலம் கொண்டாவது செயல்பட்டால்தான்
பொதுநலம் காப்பாற்றப்படும்,
 
என்ன இவன்?
சுயநலம் பற்றி பேசுகிறான்  என எண்ணாதீர்கள்!
இலவசம் என்று சொன்னால்தான் ஓர் அரசாங்கமே
ஆட்சி அமைக்க முடிகின்றது நம் மக்களிடம் -எனவே
சுயநலம் சொல்லி பொதுநலம் காப்பதில் தவறில்லை,
 
ஆள விடு!      ஆள விடு!        என ஆர்ப்பரிக்கும் மனிதவளமே
நீ முதலில் பூமியை வாழவிடு,,,,,